கடுக்காய்
தாவர இயல் பெயர்: Terminalia chebula
தாவர இயல் பெயர்: Terminalia chebula
இதன் மறு பெயர்கள்: கற்காடக சிங்கி, அமிர்தம்
வளரும் இடங்கள்: கடுக்காயின் தாயகம் இந்தியா தான்.
பயன் தரும் பகுதிகள்: கனி
பொதுவான தகவல்கள் : கடுக்காய் மரத்தை பற்றிய பல குறிப்புகள் புராணத்தில் உள்ளன. இதன் மூலம் இந்த மரம் மிகப் பழமையான மரம் என்பதை நாம் அறியலாம். இதனை நிரூபிக்கும் விதத்தில் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கிறது.
புராணங்களில் கடுக்காய் :-
தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும் சமயத்தில் அதில் இருந்து ஒரு துளி பூமியில் சிந்தி கடுக்காய் மரமாக உருவெடுத்ததாம். இப்படியாகப் புராணங்கள் இந்த மரத்தைப் பற்றி குறிப்பிடுகிறது.
கடுக்காய் சிறந்த மருத்துவத் தன்மை உடையதாகும். வட மொழியில் 'மருத்துவரின் காதலி' என்று இதனை அழைக்கிறார்கள். நமது சித்த மருத்துவத்தில் 'திரிபாலா' என்ற கூட்டு மருந்தாக இதனைப் பயன்படுத்தி வருகிறோம். கடுக்காயை நம்மூர் நாட்டு மருந்துக்கு கடைகளில் மிக எளிதாகப் பெற்று விடலாம். கடுக்காயின் தோலை மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும். உள்ளிருக்கும் பருப்பை நாம் பயன்படுத்தக் கூடாது. இதன் ஓட்டைப் பொடியாக்கி வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.
கடுக்காயை மட்டுமே உண்டு உயிரோடு வாழலாம் என்று பழைய சித்த மருத்துவப் பாடல் கடுக்காயின் புகழை எடுத்து உரைக்கிறது. இன்னொரு சித்த மருத்துவப் பாடலில் காலை இஞ்சி, பகல் சுக்கு, மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் 'கோலை ஊன்றி குறுகி நடப்பவரும் கூட காலை வீசி குலுங்கி நடப்பாராம்' என்று கடுக்காயின் சிறப்பை எடுத்து உரைக்கிறது.
அது மட்டும் அல்ல, கடுக்காய்த் துவையல் மலத்தைக் கட்டும். கடுக்காய் லேகியம் உடலில் எதிர்ப்பு சக்தியை கூட்டும். அதுவே ஒரு காயகல்ப மூலிகை தான். மொத்தத்தில் என்றும் இளமையுடன் இருந்து மரணத்தை தள்ளிப் போட கடுக்காய் ஒரு சிறந்த மூலிகை மருந்தாகும். இது உடலில் இருக்கும் செல்கள் சீக்கிரத்தில் இறக்காமல் பார்த்துக் கொள்வதால் முதுமை அவ்வளவு சீக்கிரத்தில் நம்மை நெருங்குவது இல்லை. ஏன் மரணமும் கூடத் தான்!
கடுக்காயின் இதர மருத்துவப் பயன்கள்:
* அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.
* இரவு நேரத்தில் உறங்கச் செல்வதற்கு முன்னர், ஒரு தேக்கரண்டி கடுக்காய்ப் பொடி எடுத்து, வெந்நீரில் கலந்து குடித்துவந்தால், மறுநாள் மலம் இளகி வெளியேறும்.
* சிறு பிள்ளைகள் வயிற்று வலியால் அழும் சமயத்தில் கடுக்காயை இழைத்து வயிற்றில் பற்றுப் போட்டால் வயிற்று வலி பறந்து போய்விடும்.
* பதினைந்து கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, பதினைந்து கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.
* இடுப்பில் படை உள்ளவர்கள் கடுக்காயை சந்தனக் கல்லில் அரைத்து படை உள்ள இடங்களில் தடவினால் படை நாளடைவில் மறைந்து விடும். நல்ல குணம் கிடைக்கும்.
* கடுக்காய் ஓட்டைத்தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.
* கடுக்காய்த் தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டுவர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.
* கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவற்றின் கலவை தான் திரிபலா சூரணம். திரிபலா சூரணத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியம் பெருகும்.
* கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து, அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல், புண் ஆகியன ஆறும்.
* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
* கடுக்காய்ப் பொடியைக் கொண்டு பல் விளக்கினால், பல் உறுதியாகும். ஈறில் ஏற்படும் பிரச்னைகள் சரியாகும்.
* 25 கிராம் அளவுக்குக் கடுக்காய்ப் பொடியை எடுத்து, ஒரு டம்ளர் நீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, அரை டம்ளர் நீராகச் சுண்டிய பின்னர் குடித்துவந்தால், கண் நோய்கள் குணமாகும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும்.
* 20 கிராம் கடுக்காய்ப் பொடியுடன், 20 கிராம் நெய் சேர்த்து வறுத்து, இந்துப்புடன் சேர்த்து இரண்டு கிராம் வீதம் மூன்று வேளைக்குச் சாப்பிட்டுவர, வயிற்றுப்புண் குணமாகும்.
* கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.
* ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு. கடுக்காய் வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் அனைத்தையும் ஆற்றிடும் வல்லமை பெற்றது. மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும்.
* மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டுவர, ஜீரணசக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.
* தரம் இல்லாத குங்குமத்தை பயன்படுத்துவதால் நெற்றியில் புண் வந்து விடும். இந்நிலையில் கடுக்காயை இழைத்துப் பற்றுப் போட்டால் அந்தப் புண் ஆறிவிடும்.
* மூக்கில் இருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த் தூளை எடுத்து மூக்கால் உறிய, இரத்தம் வருவது நின்று விடும்.
கடுக்காயின் இதர பொருளாதாரப் பயன்பாடுகள்:-
* கடுக்காய் மரத்தழைகளை கால் நடைத் தீவனமாகப் பயன்படுத்தலாம். கடுக்காய் மரத்தில் இருந்து பிசின் எடுக்கலாம். பல்வேறு தொழில்களுக்கு ஒரு உப மூலப் பொருளாக இருக்கும் டானின் கடுக்காயில் இருந்து தான் எடுக்கப்படுகிறது. அதனைக் கொண்டு தோல் பதனிடலாம்.
* முன்னொரு காலங்களில் அரண்மனைகள், கோயில்கள் மற்றும் மாளிகைகளை கட்டும் சமயத்தில் சுண்ணாம்பில் கடுக்காயை ஊர வைத்து அத்தண்ணீர் கலந்து கட்டப்பட்டது. அதனால் தான் அவைகளில் இன்றும் கூட சில காலத்தையும் கடந்து நிற்கிறது.
No comments:
Post a Comment